நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளை தவிர வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கை மீறி பெரும்பாலான பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிகின்றனர். இதனால் உத்தரவை மீறும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் சென்னையில் காவல்துறையின் கண்காணிப்பை மீறி ஒரு சில சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க காவல்துறையினர் ட்ரோன் (ஆளில்லா விமானம்) கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.
முதல்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளான கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், அடையார் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன் கருவிகள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும், அதிக முறை அத்தியாவசியத் தேவைகள் என்று வெளியே சுற்றித் திரியும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அத்தியாவசியத்துக்கு வெளியே செல்வோர் அனுமதி கடிதம் பெற்று செல்ல வேண்டும் - மாவட்ட நிர்வாகம்!