சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்கள் விடாமல் தொடர்ந்து அதி கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கியதால் குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.
மேலும் வேளச்சேரி, மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் முதல்தளம் மூழ்கும் அளவிற்கு மழைநீர் சூழ்ந்திருந்ததால் காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் ரப்பர் படகுகள், மீன்பிடி படகுகள் மூலம் பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.
குறிப்பாக அதிக வெள்ளம் பாதிக்கப்பட்ட மேற்கு தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம், பி.டி.சி குவாட்டர்ஸ், சி.டி.ஓ காலனி, அமுதம் நகர், அஞ்சுகம் நகர், கோகுலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 அடி உயரத்திற்கு முதல் தளம் மூழ்கும் அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.
தொடர்ந்து இன்றும் வீடுகளில் இரண்டாவது தளங்களில் இருப்பவர்களுக்கு உணவு, பால் பாக்கெட் எதுவும் கிடைக்காத நிலையில், அவர்களையும் படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கும் நடவடிக்கைகளில் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கழுகு காட்சிகளில் பார்க்கும்போது தாம்பரம் தனித்தீவு போல் காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க: அலட்சியம், பேராசை - தமிழக அரசை கடுமையாக சாடிய சந்தோஷ் நாராயணன்!