ஆவடி : திருமுல்லைவாயல், மணிகண்டபுரம், 9ஆவது தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (52). இவர், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள வாட்டர் டேங்க்கிற்கு சென்று வர இரும்பு ஏணி செய்ய குப்புசாமி ஆர்டர் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் குப்புசாமி ஆவடி காமராஜ் நகர், 4ஆவது தெருவைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சிவகுமார் (35) என்பவருடன் இரும்பு ஏணி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர், அவர்கள் இருவரும் சேர்ந்து ஏணியை தூக்கிக் கொண்டு இரண்டாவது மாடிக்குசென்றனர். அப்போது, அவர்கள் படிக்கட்டு வழியாக மாடிக்குப் போகும்போது, வீட்டு சுற்றுச்சுவரை ஓட்டிச் சென்றுகொண்டிருந்த மின் வயரில் இரும்பு ஏணி உரசியுள்ளது.
அதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் உடல் கருகி தூக்கி வீசப்பட்டனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குப்புசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அவர் பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவல் அறிந்த திருமுல்லைவாயல் காவல் துறையினர் சிவகுமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.