சென்னை: சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் நேற்று (ஜன.26) 73ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் மண்டல தலைவர் எஸ்.என். ஸ்வாமி தேசியக் கொடியை கொடிக்கம்பத்தில் பறக்கவிட்டார்.
இதற்கிடையே நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அங்கிருந்த ரிசர்வ் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காமல் இருந்த விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில் இன்று (ஜன.27) திராவிடர் கழக இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்காமல் அவமதித்த ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழை அவமதிக்கும் செயல்
புகார் அளித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழக மகளிர் பாசறையைச் சேர்ந்த மணியம்மை, "தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது தவறாமல் அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள போதும், ரிசர்வ் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காமல் தர்க்கம் செய்தது தமிழையும், தமிழர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயல்.
ரிசர்வ் வங்கி அலுவலர்கள் இத்தகைய செயலில் வேண்டுமென்றே ஈடுபட்டதன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பிய அவர், இதற்குப் பின்னால் யார் இருந்து இவர்களை செயல்படுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். இவ்விவகாரத்தில் ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னிப்பு கேட்டாலும் அவர்கள் செய்த செயலை மன்னிக்க முடியாது" எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது திமுக அரசு அல்ல, விவசாயிகளுக்கான அரசு- மஞ்சளுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை!