2020 ஜனவரி 1ஆம் தேதியை அடிப்படையாக கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழ்நாட்டில் ஆறு கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் இரண்டு கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 பேரும், பெண்கள் மூன்று கோடியே மூன்று லட்சத்து 49 ஆயிரத்து 118 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஐந்தாயிரத்து 924 பேரும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிக மற்றும் குறைவான வாக்களர்கள் கொண்ட தொகுதிகள் சென்னையில் உள்ளன. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் ஆண்கள் மூன்று லட்சத்து 25 ஆயிரத்து 28 பேரும், பெண்கள் மூன்று லட்சத்து 20 ஆயிரத்து 963 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 82 பேரும் என மொத்தம் ஆறு லட்சத்து 46 ஆயிரத்து 73 பேரும் உள்ளனர்.
குறைந்தபட்சமாக துறைமுகத்தில் ஆண்கள் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 620 பேரும், பெண்கள் 81 ஆயிரத்து 87 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 50 பேரும் உள்ளனர்.
மேலும், வாக்காளர் சேர்க்கை நீக்கல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் ஜனவரி 4, 5 மற்றும் 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் சேர்க்கை, நீக்கலுக்கு தேவையான 6, 7, 8 ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களிடம் வழங்கலாம். மேலும் புதிய படிவத்தை பூர்த்தி செய்பவர்கள் ஆதார், ஓட்டுனர் உரிமம், வங்கிக் கணக்கு அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றரை ஆவணமாக சமர்ப்பிக்கலாம். www.nvsp.in என்ற இணையதளம் மூலம், voter helpline என்ற மொபைல் செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். வெளிநாட்டில் உள்ள இந்திய வாக்காளர் 6 ஏ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பெரம்பலூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!