சென்னை: மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய மாநகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில், ஒரே நேரத்தில் அதிகமானோர் பயணம் செய்ய முடிவதோடு, நகரின் அழகையும் உயரத்தில் இருந்து ரசிக்க முடியும்.
இதில், சென்னையில் தாம்பரம் - பிராட்வே இடையே 18 ஏ(18A) என்ற வழித்தடத்தில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. சென்னையில் நாளைடைவில் ஏற்பட்ட வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நேரிசல், சாலைகளில் இருக்கும் மேம்பாலங்கள், உள்ளிட்ட பல்வேறு காரணத்தினால், கடந்த 2008ஆம் ஆண்டுடன் தமிழ்நாடு அரசும், மாநகர போக்குவரத்து கழகமும் முடிவு செய்து இந்த டபுள் டெக்கர் பேருந்து சேவையை நிறுத்தியது.
இதையடுத்து தொடர் பஸ் (Long bus) என்ற இரண்டு பேருந்துகளை ஒரே பேருந்தாக இணைத்து டிரெய்லர்(Trailer Bus) வகை பேருந்துகளை கோயம்பேடு, தாம்பரம், பிராட்வே போன்ற வழித்தடங்களில் நீண்ட காலம் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயக்கியது. ஆனால் தொடர் பேருந்தும் காலப்போக்கில், சாலையில் நடைபெறும் பணிகள், மற்றும் மெட்ரோ பணிகள், குறுகிய சாலைகளில் திரும்புவது என்ற சில சிக்கல்களை சந்தித்தது. இந்த சிக்கலினால் அந்த பேருந்தை இயக்க ஓட்டுநர்களுக்கு சவலாக இருந்தது.
அதனால் சென்னையில் தொடர் பேருந்துகளும் சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், டபுள் டெக்கர் பேருந்துகளை மீண்டும் இயக்க வாய்ப்புள்ள இடங்களான அண்ணாசாலை, ஒ.எம்.ஆர். சாலை, கடற்கரை சாலை உள்ளிட்ட நேர் சாலைகளில் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்து உள்ளது.
இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்க அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களான மாமல்லபுரம், கோவளம், மெரீனா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் சேவையைக் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த எலட்ரிக் ஈ-டபுள் டெக்கர் பேருந்துகளின் சோதனை ஓட்டம் சென்னை கடற்கரை சாலையில் நடந்து வருகிறது. காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் மின்சார டபுள் டெக்கர் பேருந்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் இயக்கி சோதனை செய்து வருகிறது.
இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது, "டபுள் டெக்கர் பேருந்துகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் சோதனை செய்து வருகிறது. துறை சார்ந்து பேச்சுவார்த்தை மற்றும் ஆய்வுப் பணிகள் முடிவடைந்து, சாத்தியமான முடிவுகள் கிடைத்தால் இந்த பேருந்துகளுக்கான டெண்டர் கோரப்படும். அதன் பின்னர் டபுள் டெக்கர் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு சென்னையில் திட்டமிட்ட சாலைகளில் மட்டும் இயக்கப்படும்" என்றனர்.
இதையும் படிங்க: சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் - மதுரை கோட்ட மேலாளர் தகவல்