கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணத்தை செலுத்தச் சொல்லி மாணவர்களை தனியார் கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர், பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகளில் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திப்பது குறித்து அரசின் கவனத்திற்கு செய்திகள் வந்துள்ளன.
அரசு உத்தவின்படி, தங்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று சொல்வது, வரும் கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்தச் சொல்வது, மேலும் கல்விக்கட்டணம் செலுத்த கால தாமதம் ஏற்பட்டால் அபராத தொகையுடன் கல்விக் கட்டணத்தை செலுத்துச் சொல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அரசு உத்தரவை தனியார் கல்லூரிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பல்கலை, கல்லூரிகளுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வு