கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை ஊரடங்கு முடியும் வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பணிக்குச் செல்லாமல் குடும்பத்தோடு வீட்டிலேயே ஆண்கள் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். மேலும் மதுபானக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளதால், குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆண்களால் பலவிதமான இன்னல்களுக்கு பெண்கள் ஆளாக்கப்படுவதாகவும், வீட்டிலேயே இருப்பதால் கூடுதலான வீட்டு வேலைக்கு உட்படுத்தி அவர்களைக் கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
பெண்கள் மீது வன்முறை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி எச்சரித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 24 நாள்களில் மட்டும் குடும்பப் பெண்கள் மீது வன்முறை தொடர்பாக சுமார் 2,963 புகார்கள் தொலைபேசி மூலமாகவும், காவலன் செயலி மூலமாகவும் பெறப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தப் புகார்களில் இதுவரை 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். இதில் 738 குடும்பத்தினரிடம் காவல் துறையினர் சமாதானமாகப் பேசி சேர்த்து வைத்து அனுப்பியுள்ளனர். மேலும் 1,132 புகார்களைக் குறைதீர்க்கும் முகாமில் குறைகேட்டு தீர்வு காண வைத்து அனுப்பியுள்ளனர். 557 புகார்களை விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.
இதுமட்டுமில்லாமல் ஏற்கெனவே குடும்ப வன்முறையில் ஈடுபட்ட நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பெண்கள் மீதான வன்முறையைக் கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் ஏடிஎஸ்பி தலைமையில் காவலர்களை நியமித்துள்ளதாகவும், குழந்தைகள் மீதான நடக்கும் குற்றங்களைக் கண்காணித்து வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண்களின் தனிமையை பணமாக மாற்றிய குமரி இளைஞர் கைது!