புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர், தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெரு, வ.உ.சி நகர்,ஜெ.ஜெ நகர், தண்டையார்பேட்டை ஆதி திராவிடர் தெரு, பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதாக தண்டையார்பேட்டை மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலர்களுக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியத்தால் நாய்கள் வெறி கொண்டு, சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகள், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் என அனைவரையும் கடிக்க தொடங்கியுள்ளது.
தண்டையார்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, நேற்று ஒரே நாளில் மட்டும் 23 பேர் அரசு சின்ன ஸ்டான்லி மருத்துவமனையில் நாய் கடித்ததாக, சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 பேரை கடித்த பின்பு மாநகராட்சி அலுவலர்கள் தற்போது அந்தப் பகுதிகளுக்கு சென்று நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாய்களின் தொல்லை அதிகம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும், அலுவலர்களின் அலட்சியத்தால் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கடைக்குச் சென்ற சிறுவனின் கழுத்தைக் கடித்துக் குதறிய நாய்!