சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி கடந்த நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, இன்றைய தினம் பெங்களூருவிலிருந்து காலை 7.45 மணி அளவில் புறப்பட்டார் சசிகலா, தமிழ்நாடு எல்லையை அவர் தொட்டவுடன், அமமுக, அதிமுக தொண்டர்கள் ஏராளாமானோர் சாலையின் இரு ஓரத்தில் நின்று பிராமாண்டமான வரவேற்பை அவருக்கு அளித்தனர். ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான கட்சி, நிர்வாகிகள், தொண்டர்களை எச்சரித்த நிலையிலும் கூட, இதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை என்றே தெரிகிறது.
ஒருபக்கம் அதிமுகவின் ஓ. பன்னீர் செல்வம், முக்கிய அமைச்சர்கள் தொடர்ந்து அமைதியை கடைபிடித்து வரும் நிலையில், இபிஎஸ் ஊர் ஊராக சென்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் வேட்பாளர் என்பதால் அவர் மட்டுமே தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்ட சில அமைச்சர்களின் குரல் மட்டும் ஒலித்து கொண்டு வருகிறது.
சசிகலா ஆதரவு அமைச்சர்கள் யார்?
நான்காண்டு ஆட்சிக் காலத்தை முடித்த இபிஎஸ், சசிகலா வருகைக்கு பின், அவர் முதலமைச்சர் வேட்பாளாராக இருப்பாரா? என்பதும் கூட கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது, அமைதி காத்துள்ள அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து மீண்டும் அவரை கட்சியின் முக்கியப் பொறுப்பாளராக முன்னிறுத்தவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே, அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் சசிகலாவை வரவேற்று பேசியுள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின், சசிகலாவை அதிமுகவின் தலைமையாக ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சசிகலாவின் கால்களில் விழுந்துகூட ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். சசிகலா சிறைக்குச் செல்லும் முன், எடப்பாடி பழனிசாமியை மிகுந்த விசுவாசியாக கருதி, அவரை முதலமைச்சர் அரியணையில் அமர வைத்தார். சசிகலா சிறை சென்ற பிறகு, இபிஎஸ் தனது நிலையை மாற்றி, அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து தமக்கான ஆதரவை அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் நாட தொடங்கினார்.
மேலும், தனக்கு விசுவாசமாக அவர்கள் இருக்கும் வகையில் பல்வேறு சலுகையை அவர்களுக்கு காட்டியதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற குழப்பம் அதிமுகவில் ஏற்பட்டது. இது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாக இருந்தது. எனினும், கட்சியின் பொதுக்குழுவை கூட்டி, தான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என நிரூபித்தார். இது கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினாலும் கூட, வேறு வழியின்றி நிர்வாகிகள் அதை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்கால பரதனின் திட்டம்
ஓபிஎஸ் தேர்தல் பரப்புரையைத் தவிர்த்து வருகிறார். பெரும்பாலான அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளின் மௌனம் அவர்கள் சசிகலாவின் விசுவாசிகள் என்றே வெளிக்காட்டுகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்து வரும் விளம்பரத்தில், தன்னை 'பரதன்' என வெளிப்படுத்திவருகிறார். ராமாயணத்தில் பரதன் ராமனுக்கு விசுவாசமாக இருந்ததைப் போல், தானும் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததாகவும், ஜெயலலிதா தன்னை 2001ஆம் ஆண்டு புகழ்ந்ததையும் சுட்டிக் காட்டி உள்ளார்.
ஆனால், முக்குலத்தோர் மத்தியில் சசிகலாவிற்கு இருக்கும் ஆதரவால் சட்டப்பேரவைத் தேர்தலில்தான் தோல்வி அடையக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா குறித்து எந்தக்கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். மேலும், அவரது மகன் பிரதீப் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கருதப்படுத்துகிறது.
அதிமுக-அமமுக-பாஜக
அதிமுக, தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், சசிகலா வருகைக்குப் பின், பாஜகவின் மூத்த தலைவர்கள், அதிமுக, அமமுக கட்சிகளை ஒன்றிணைத்து, பாஜகவின் பலத்தை இத்தேர்தலில் நிரூபிக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மத்தியில் உள்ள பாஜக பிரதிநிதிகள் அதிமுகவில் பிளவு இல்லாமல் இருக்க ஆலோசனைகள் வழங்கலாம் என்று கூறப்படுகிறது. அரசியல் ஆய்வாளர் அ.மார்க்ஸ், இது குறித்து கருத்து கூறுகையில், "ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் யார் பதவியை பிடிப்பது என்ற போட்டி தொடர்ந்து நடந்து வருகிறது. சசிகலா வருகைக்கு பின், இந்த போட்டி உச்சகட்டத்தை தொடும். இதை பாஜக ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அதிமுகவை நிலைகுலைய செய்யலாம்" என்றார்.
இதையும் படிங்க: வெற்று விளம்பர ஆட்சி நடத்தும் அதிமுக கனிமொழி எம்பி குற்றச்சாட்டு