சென்னையை சேர்ந்த ஏ.மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் (MADRAS HIGH COURT) தாக்கல் செய்த மனுவில், "சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் பயிற்சி மையம் உள்ளது. இதனை தெலுங்கானாவில் உள்ள அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்துடன் இணைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த முடிவை கைவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
ஒன்றிய அரசு திட்டம்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "இரு மையங்களையும் இணைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு இணைத்தால் ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனுடையவர்கள் அலைச்சலுக்கு உள்ளாவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இரு மையங்களும் செயல்படும்
இதற்கு ஒன்றிய அரசு தரப்பில், "இரு மையங்களையும் இணைக்கும் திட்டம் ஏதும் இல்லை. இரு அமைப்புகளுக்கும் தனித்தனி செயற்குழு இருப்பதற்குப் பதிலாக ஒரே குழுவாகக் கொண்டு வருவதற்கான திட்டம் மட்டுமே பரிசீலனையில் உள்ளது. இரு மையங்களும் செயல்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரரின் அச்சம் அடிப்படையற்றது
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இரு மையங்களும் இணைக்கப்படும் என்ற மனுதாரரின் அச்சம் அடிப்படையற்றது எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: Chennai rain red alert: நவ. 18 ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!