சென்னை: கரோனா தடுப்பூசி விஷயத்தில் பிரதமர் மோடி பாரபட்சம் காட்டுவதாக கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா முதல் அலையின்போதே சரியான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை உருவாக்காததன் விளைவை மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 25 கோடி மக்களுக்கு மட்டுமே ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் போட்டவர்கள் மக்கள் தொகையில் 3.4 சதவிகிதம் தான். 111 உலக நாடுகளில் இந்தியா இதனால் 63ஆவது இடத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு சரிவர தடுப்பூசி வழங்கப்படவில்லை. அனைத்து மாநிலங்களையும் சமநிலைத்தன்மையோடு அணுக வேண்டிய பாஜக மிகுந்த அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருவது வேதனையை தருகிறது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பிரதமர் மோடி, பாஜக ஆளுகிற மாநிலங்களுக்கு சாதகமாகவும், பாஜக அல்லாத மாநிலங்களுக்கு பாதமாகவும் நடந்து கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்தான் மோடி பிரதமரா என கேட்க வேண்டியிருக்கிறது.
கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைப்பதை விடுத்து, தடுப்பூசி விநியோக கொள்கையை வெளிப்படைத்தன்மையோடு நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாரின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்’- கே.கேசி பாலு வழக்கு