சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவ பணியிடங்களுக்கான கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது. இதனால் 1553 காலி பணியிடங்களுக்கு சுழற்சி முறையில் 4267 பேர் பணியிட மாற்றம் பெற்றனர் என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.
சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்லூரி இயக்குனர் நாராயணபாபு, ”நடப்பாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன், சங்க நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதன் மூலம் காலியாக இருந்த 1553 இடங்களில் சுழற்சி முறையில் 4267 பேர் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.
மேலும், கள்ளக்குறிச்சி, ஊட்டி, திருப்பூர், நாகை போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 100% மருத்துவர்கள் நிரப்பப்பட்டுள்ளனர். கரோனா தொற்றுப் பணிக்காக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருந்த மருத்துவர்கள் மீண்டும் அவர்களுக்குரிய பணியிடங்களை தேர்வு செய்துள்ளனர்.
மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று முடிந்த பின்னர் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு 20 மருத்துவர்களின் பட்டியலை கொடுத்து பணி நியமிக்க வேண்டும் என கூறினார்கள். அவர்கள் கூறிய பணியிடங்களில் ஏற்கனவே மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்தப் பணியிடங்களை இவர்களை நியமனம் செய்தால் ஏற்கனவே பணியில் உள்ள மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
2019ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் போடப்பட்ட அரசாணை அடிப்படையில் ஏற்கனவே 500 மருத்துவர்கள் உதவி பேராசிரியர் மற்றும் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் கடந்த நான்காண்டுகளில் 250 பேர் அவர்கள் படித்த துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் படிப்படியாக தங்கள் துறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் ஒரு துறையில் சிறப்பு மருத்துவர்கள் உடன் ட்யூட்டராக பணிபுரியலாம். அதுபோன்று மருத்துவராக பணிபுரிந்து அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர் கூறுகின்றனர். அவர்களை உடனடியாக மாற்றம் செய்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதால், வேறு இடங்கள் காலியானவுடன் அவர்கள் மாற்றப்படுவார்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் நாளை மின் தடை... எந்தெந்த ஏரியானு தெரிஞ்சிக்கோங்க..!