இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது; “முதுநிலை மருத்துவப் படிப்பை கடந்த மே 31 ஆம் தேதியுடன் இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் முடித்துள்ளனர். அவர்களில் அரசு ஒதுக்கீடு மூலம் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட கவுன்சிலிங்கை புதிய அரசு நடத்தியது .இது வரவேற்புக்குரியது.
அதுமட்டுமன்றி, ஆன்லைன் முறையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டதால் மருத்துவர்களுக்கு ஏற்படும் தேவையற்ற அலைச்சலும், கால விரயமும் தடுக்கப்பட்டது. இது அரசு மருத்துவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு ஆன்லைன் கவுன்சிலிங் வைத்தது போல், அரசுப் பணி சாராத, முதுநிலை மருத்துவம் பயின்ற மருத்துவர்களுக்கும் ஆன்லைன் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்திட வேண்டும்.
முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து காலிப்பணியிடங்களையும் வெளிப்படைத் தன்மையுடன் காட்டி, ஆன்லைன் கவுன்சிலிங்கை நடத்தி பணி அமர்த்த வேண்டும்.
நேரடியாக அரசே பணியமர்த்தல் ஆணையை வழங்குவது சரியாக இருக்காது. இதன் மூலம் கணவன் மனைவியாக இருக்கக்கூடிய மருத்துவர்கள் ஒரே இடத்திலோ அல்லது அருகருகே உள்ள மருத்துவமனைகளிலோ பணியாற்ற முடியாத சூழல் ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பு கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையும், குழந்தைகளும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். அந்த நிலை தொடர்கிறது. அத்தகைய பாதிப்பை புதிய அரசும் உருவாக்கி விடக்கூடாது. கவுன்சிலிங் நடத்தப்படாமல் கடந்த ஆட்சிக் காலத்தில் நேரடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அது மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மருத்துவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டன என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, மருத்துவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பணி இடங்களை தேர்வு செய்யும் உரிமையை வழங்கப்பட வேண்டும். இதுவே மருத்துவர்களின் நம்பிக்கையையும், வரவேற்பையும் கூடுதலாக புதிய அரசு பெற்றிட உதவிடும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தி: நீதிமன்றம் 'பளீச்'!