சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தின் சார்பாக சென்னை சேப்பாக்கத்தில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தை குறைத்து அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை பெற வேண்டுமென தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், சிபிஐ கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன், திமுக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், அமமுகவின் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரநாத், "ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை அரசால் நடத்தப்படுகிறது. ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியைவிட அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
எனவே அரசு மருத்துவக்கல்லூரியில் வசூல் செய்யும் கட்டணத்தை இந்த மருத்துவ கல்லூரிகளுக்கும் செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய கட்டணத்தை குறைத்தால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்க முடியாது என்பதால் அரசு கட்டணங்களை குறைக்க மறுத்து வருகிறது. எனவே அரசு கட்டணத்தை குறைக்கும் வரை பல்வேறு வகையான போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: சிதம்பரம் ராஜா முத்தையா, பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை குறைக்க சீமான் வலியுறுத்தல்!