சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுபாட்டு மையத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசுகையில், “புல் புல் புயலால் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் மேகங்கள் மிகவும் தாழ்வாக வந்துள்ளது. இதன் காரணமாக சூரிய ஒளி முழுமையாக நமக்கு கிடைப்பதில்லை அதன் காரணமாகவே மாசு ஏற்பட்டுள்ளது
மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாசு அளவைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில் மாசு அதிகமாக உள்ள இடங்களில் அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் மரம் மற்றும் குப்பைகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத் துறையின் மூலமாக அனைத்து மருத்துவமனைகளிலும், சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. காற்று மாசு தொடர்பாக மக்கள் எந்தவிதமான அச்சமோ பீதியோ அடைய தேவையில்லை” என்றார்.
இதையும் படிங்க...இந்திய ஜனநாயகத் திருவிழாவின் சக்கரவர்த்தி டி.என். சேஷன்!