சென்னை: 1980 ஜூலை 20 அன்று மதுரை ஜான்சி ராணி பூங்காவில் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்டது. பின் 1982ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இளைஞரணி இரண்டாம் ஆண்டு விழாவில் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணியின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக மு.க.ஸ்டாலின் பணியாற்றிய நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். இதனால், இளைஞர் அணி செயலாளர் பதவி வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அன்றிலிருந்து திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். இந்த நிலையில், வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் மாநில இளைஞரணி மாநாடு நடத்தப் போவதாக திமுக திட்டமிட்டு, அறிவிப்பும் வெளியிட்டது. இதை முன்னிட்டு மாவட்டம் வாரியாக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், வெள்ளம் ஏற்பட்ட இடங்களில் தற்போது வரை நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு, டிசம்பர் 24ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இது குறித்து திமுக தலைமை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, அங்கு மழை வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற டிசம்பர் 17 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டு, வருகிற டிசம்பர் 24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு; ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!