சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வந்த மார்பக பரிசோதனை முகாம் நிறைவு நிகழ்ச்சி இன்று (அக்.31) நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "இந்த மருத்துவக் கல்லூரியில் கடந்த ஒரு மாதமாக மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான முகாம் நடத்தப்பட்டது. இதில் 600க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 2000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 221 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலம் 22 பேருக்கு மார்பக புற்று நோய் கண்டறிந்து சிசிக்சை எடுத்து வருகின்றனர்.
மார்பக புற்று நோய் - விழிப்புணர்வு வேண்டும்
மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. பரிசோதனை செய்து கொள்வதற்கு பெண்களிடம் தயக்கம் இருக்கிறது. கீழ்பாக்கத்தில் உள்ள மேமோகிராம் கருவி தெற்கு ஆசியாவிலேயே நவீன தொழில் நுட்பத்தை கொண்டது. தனியார் மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை செய்வதற்கு அதிகளவில் செலவாகும். பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகளவு ஏற்பட வேண்டும். தேசிய அளவிலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு தொடரும்
தமிழ்நாடு என பெயரிடப்பட்ட நாளான ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடுவதே சரியாக இருக்கும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை உருவாக்கி அதில் உள்ள பிரச்னைகளை ஆய்வு செய்தார்கள். புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்ற கொள்கையில் இருந்து முதலமைச்சர் மாறப்போவது கிடையாது. அடிப்படை பிரச்னைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’பெண் சக்திக்கு சிறந்த உதாரணம் இந்திரா காந்தி’