திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு ஆகிய மூன்றையும் எதிர்த்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இன்று புரசைவாக்கத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை நிறைவு செய்து உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் பேசிய அவர், " மத்திய அரசின் கொடுமையான சட்டங்களில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு உள்ளிட்டவை அடங்கும். இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விடுபட்டு போயுள்ள இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்களையும் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக உறுப்பினர்கள் பேசினாலும் அதை மத்திய அரசு காதில் கேட்கவில்லை.
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டம் நிறைவேறியதற்கு அதிமுக, பாமகதான் காரணம். இந்திய மக்களுக்கு துரோகம் செய்த கட்சிதான் அதிமுக, பாமக. இந்த சட்டத்தால் எல்லா தரப்பு மக்களுக்கும் ஆபத்து வரும், ஏன் நம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் வரும்.
இஸ்லாமிய இயக்கங்கள் குடியுரிமை சட்டம் குறித்து முதலமைச்சரை சந்தித்து பேசுகையில், நான் பிறந்த ஊர் எனக்கே தெரியாது, ஆதாரம் இல்லை என தெரிவித்துள்ளார். எனவே அவருக்கே ஆபத்து உள்ளது. மத வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நமக்குள் வேற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி திட்டம்தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம்.
கையெழுத்து இயக்கத்திற்குப் பிறகும் மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் திமுக கூட்டணி சார்பாக அறிவிக்கப்படும். இதை எச்சரிக்கையாக கூறவில்லை, உணர்வுப்பூர்வமாக கூறுகிறேன்.
மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்கள் போல் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி செய்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கு அளித்து பாவம் செய்ததற்கு இது பரிகாரமாக அமையும்" என்றார்.
இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும்'