சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு முதல்முறையாக நடைபெறும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு, பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.ராசா, துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், "நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியையும் நாம் கைப்பற்ற வேண்டும். அதற்கான கட்டமைப்பை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும். பூத் கமிட்டி அமைப்பதில் மிகவும் கவனமாக இருங்கள், நன்கு பணியாற்றக்கூடிய பூத் ஏஜெண்டுகளை தேர்ந்தெடுத்து நியமியுங்கள். கூட்டணியைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன். வலுவான கூட்டணியுடன்தான் நாம் போட்டியிடுவோம்.
புதிதாக அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அணிகளில் புதிதாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணிகளுக்கென்று தன்னிச்சையாக அதிகாரம் வழங்கக் கூடிய வகையில் விதிகள் உருவாக்கப்படும், சிறப்பாக பணியாற்றுங்கள். அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சரியாக சென்றடைகிறதா? என்பதை கண்காணியுங்கள். அமைப்பு மற்றும் அணிகள் சார்பாக தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில், '7,500 கோடி ரூபாய் மதிப்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா
மேலும், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும்100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் - டிசம்பர் 17ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பேராசிரியரின் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கம் நடைபெறும்- டிசம்பர் 18ஆம் தேதி வட சென்னையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும் - பேராசிரியரின் பிறந்த நாளான 19ஆம் தேதி, கழக அமைப்புகள், அணிகள் சார்பில் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது பேசிய செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், 'முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் பேரறிஞர் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும்' என்று தன்னை முன்மொழிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து, கொள்கையுணர்வு மறையாமல் நம் நெஞ்சில் நிலைத்து, நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 15ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், அதனை மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பேராசிரியர் அன்பழகன் விருது" - 114 அரசுப் பள்ளிகள் தேர்வு!