சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு மட்டுமே சொந்தமான பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். பா.ம.கவின் குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறப்படுகிறது என்றும் அரசியல் லாபத்திற்காக மக்களிடையே பொய்யான தகவல்களை பரப்புவதாக தி.மு.க சார்பில் கூறப்பட்டது.
ஆனால் அது பஞ்சமி நிலம் இல்லை, பட்டா நிலம் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் திமுக தரப்பில் அளிக்காததால், தமிழ்நாடு பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரில் குறிப்பிட்டுள்ள நிலம் உண்மையில் பஞ்சமி நிலமா? அல்லது பட்டா நிலமா? யாரிடம் இருந்து வாங்கப்பட்டது? பட்டா விவரங்கள் என்ன? யார் பெயரில் நிலம் உள்ளது? கடந்த 30 ஆண்டுகளால் நிலத்தின் உரிமையாளர் யார்? என விளக்கம் கேட்டு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி மற்றும் டிசம்பர் 13ஆம் தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை, ரத்து செய்யக் கோரி முரசொலி அறக்கட்டளை தரப்பில் 2020ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று (ஜூன் 13) விசாரணைக்கு வந்தபோது, முரசொலி அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, அரசியல் உள்நோக்கத்தோடு இந்த புகார் அளிக்கப்பட்டதாகவும், புகார் அளித்த சீனிவாசனும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அப்போதைய துணை தலைவர் எல்.முருகனும் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க அலுவலகமான கமலாலயம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக யாரேனும் புகாரளித்தால், இதுபோன்று விசாரணை நடத்துவார்களா? என கேள்வி எழுப்பிய வில்சன், இந்த புகாரை விசாரிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திற்கு அதிகாரமே இல்லை எனவும் வாதிட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆணைய தலைவர் சார்பில் இதுவரை பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை எனவும் வில்சன் சுட்டிக்காட்டினார். அப்போது ஆணையத்தின் தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, இந்த விவகாரத்தை நாங்கள் அரசியலாக்கவில்லை என்றும், மனுதாரர் தரப்புதான் அரசியலாக்குவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, வழக்கில் இதுவரை ஏன் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: பஞ்சமி நிலம்; இரு கட்சிகளின் பிரச்னை மட்டும் அல்ல...