சென்னை : திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை இன்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மொத்தம் பதினாறு நாட்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றது. ஒரு ஆக்கப்பூர்வமான பணிகளும், விவாதங்களும் அங்கு நடைபெறவில்லை எனவும் இரண்டு அவைகளிலும் ஒன்றிய அரசு கொண்டு வந்த மாநில உரிமைகளை தடைசெய்யும் மசோதாக்களுக்கு நான், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், கனிமொழி ஆகியோர் எதிர்த்து பேசினோம்.
மணிப்பூர் பிரச்சினை நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் வேறு முக்கியமான மசோதாக்களை கொண்டு வந்து மணிப்பூர் பிரச்சினையை திசை திருப்பும் செயலில் தான் மத்திய அரசு ஈடுபட்டது. நூறு நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடைபெற்று வருகிறது. இக்கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குழந்தைகள், பெண்கள் என 230 நபர்கள் மியன்மார் எல்லையில் இருக்கும் காடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்கள் கொண்டு சென்ற அரிசி மற்றும் வேறு உணவு பொருட்கள் எத்தனை நாட்கள் போதுமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதும் தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினால் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
இந்தியா கூட்டணி என்ற எதிர்கட்சி கூட்டணியின் ஒரே கோரிக்கை மற்ற நிகழ்வுகளை நிறுத்தி விட்டு மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும் அது தான் நாடாளுமன்ற இயல்பு என்றோம். ஆனால் அவர் நாடாளுமன்றத்திற்கு தினம்தோறும் வந்து கொண்டு தான் இருக்கின்றார், ஆனால் அவைக்கு வருவதில்லை. ஒரு அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர் அவரின் பொறுப்புணர்வை அறிந்து செயல்பட வேண்டும். ஆனால் பிரதமர் அப்படி நடந்து கொள்ளவில்லை.
ஒரே நாளில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மசோதாக்கள் நிறைவேறுகிறது. இப்படி ஒரு மசோதா நிறைவேறியது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை. மணிப்பூரில் இன்னும் எத்தனை நபர்கள் இறந்து, இன்னும் உயிர் தப்ப வேண்டும் என காடுகளுக்கு தப்பி சென்று இருக்கின்றனர் என தெரியவில்லை. காலையில் கேள்வி நேரம் பிறகு பூஜ்ஜிய நேரம், மதிய நேரம் மணிப்பூர் பிரச்சனையை பற்றி பேச விடாமல் நீர்த்து போகச் செய்தனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் மாலை நேரம் மட்டும் விவாதம் நடத்தி அந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தனர். இது எதிர்கட்சிகளின் கருத்துகளை அவையில் பதிவு செய்ய விடாமல் தடுக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. பிரதமர் இரண்டு மணி நேரம் 10 நிமிடம் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் முதல் ஒன்றரை மணி நேரம் மணிப்பூர் மாநிலம் குறித்து வாய் திறக்கவில்லை.
பிரதமர் மணிப்பூர் மாநிலம் குறித்து ஒன்றரை மணி நேரத்தில் பேசவில்லை என கண்டனம் தெரிவித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தோம். நாங்கள் வெளியே சென்ற பிறகு கடைசியாக 2 நிமிடங்கள் மட்டும் மணிப்பூர் மாநில கலவரத்திற்கு காரணமானவர்களும் தவறு செய்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என பிரதம் பேசினார். கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் மணிப்பூரில் கலவரம் நடந்து வருகிறது. எப்போது பிரதமர் நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற எதிர்கட்சிகளின் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.
குறிப்பாக பயன்பாடுகளில் இருந்த சட்டங்களை மாற்றியுள்ளனர். அதில் இருக்கும் குறிப்பீடுகள் வினோதமாக உள்ளது. மக்களுக்கு புரியும் வகையில் இருக்கும் ஒரு சட்டங்களை தங்களுக்கு ஏற்ற மொழியில் மாற்றி கொள்வது வேண்டுமென்றே மொழித்திணிப்பை எப்படி ஏற்று கொள்ள முடியும். இவர்கள் மாற்றும் சட்டத்தின் பெயர்களை எப்படி நீதிமன்றத்தில் உச்சரிப்பார்கள்.
மாநில கட்சியான திமுக வை தொடர்ந்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விமர்சிப்பது திமுக மீது அவர்களுக்கு எவ்வளவு அச்சம் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க நினைப்பது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. தமிழகத்தில் அதற்கான வாய்ப்புகளே இல்லை. அதை வருகின்ற தேர்தலிலே இந்தியா கூட்டணி நிரூபித்து காட்டும்.
தமிழகத்தில் இருக்கும் சட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி அளிப்பதில்லை. அவர் எப்போதும் மத்திய அரசுக்கு ஆதரவு தரும் வகையில் தான் பேசி வருகிறார். அதுபோல் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உரிமைகளைப் பறித்து சட்டமே இயற்றிவிட்டனர். மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அக்கறையில்லாத பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என இந்தியா கூட்டணி தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வந்தோம்.
மக்கள் விரோத அரசாக இருக்கிற பாஜக அரசை வரவிருக்கும் தேர்தலில் ஆட்சி அமைக்க விட கூடாது என்பதை மனதில் வைத்து மக்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் நாடாளுமன்றத்தை முடக்கவில்லை, எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். எங்களுடைய கருத்தை மிக தெளிவாகவும், அழுத்தமாகவும் தெரிவித்து வருகிறோம். அதற்கு கட்டாயமாக அரசு பதிலளிக்க வேண்டும்.
ஒன்றுமே நடக்காமல் கூட்டத்தொடர்கள் முடிந்துள்ளன. பாஜக அரசு முக்கியமான கூட்டத்தொடர்களில் வேறு ஏதோ ஒரு பிரச்சினையை கொண்டு வந்து அந்த கூட்டத்தொடரையே முடித்து வைத்திருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அரசியல் மேடையில் பேசுவது போல் எதிர்கட்சிகளின் மீது விமர்சனங்களை வீசுகின்றனர். நாடாளுமன்றத்தில் கடைபிடிக்க வேண்டிய நாகரீகத்தை கடைபிடிக்கவில்லை.
அவையின் மத்தியில் சென்று குரல் எதிர்ப்பு தெரிவிப்பது தவறு தான். ஆனால் நாங்கள் எந்த விவகாரத்திற்காக குரல் கொடுக்கிறோம் என்பதை மக்களிடம் காட்ட வேண்டும், ஆனால் அதை முற்றிலும் மறைத்து விடுகின்றனர். அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது புதிதல்ல. சில மாநிலங்களில் சிலரை முடக்கியுள்ளனர், அச்சுறுத்தி உள்ளனர். ஆனால் எங்கள் மடியில் கனமில்லை அதனால் எங்களுக்கு கவலை இல்லை.
அம்மையார் நிர்மலா சீதாராமன், 1991 ஆம் ஆண்டு தான் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்தார். ஆனால் 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நடந்ததை நேரில் பார்த்தது போல் பேசியுள்ளார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்றைய தினம் இந்தியாவிலேயே இல்லாத போது அதை நேரில் கண்டது போல் பேசி இருப்பது விசித்திரமான ஒன்று.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான் எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு அமைச்சர் இருப்பதே வெளியில் தெரியவந்தது. அதுவரை அமைச்சரவை புகைப்படங்களில் கூட ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருப்பார். அன்றைய சட்டமன்ற நிகழ்வின்போது ஜெயலலிதாவிற்கு என்ன ஆனது என்பது குறித்து அன்றைக்கு அவரது அருகில் இருந்த இன்றைய காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் தெளிவாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மட்டுமே அன்றைக்கு என்ன நடந்தது என்பது பற்றி முழுமையாக தெரியும்.
அரசியலுக்காக பழைய பிரச்சினைகளை எடுத்து மீண்டும் பேசுகின்றனர். அனைத்தும் ஒரு 6 மாதங்களுக்கு மட்டும்தான் அதன் பிறகு தேர்தல் வரும், நிச்சயம் காலம் மாறும். பாஜக அரசு எதை கொண்டு வந்தாலும் அதை கண்மூடித்தனமாக அ.தி.மு.க ஆதரிக்கின்றது. கட்சியின் கொள்கை என்பது வேறு கூட்டணி என்பது வேறு என்ற புரிதல் கூட அவர்களுக்கு கிடையாது. பாஜகவும் அமித்ஷாவும் எதைக் கொண்டு வந்தாலும் ஆதரிப்போம் என கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்றனர்.
ஆளுநர் இன்றைக்கு நேற்று மட்டுமில்லை, ஆரம்பம் முதலே முன்னுக்கு முரணாக பேசிவருகிறார். ஒரு மாணவனின் பெற்றோர் மிக தெளிவாக கேட்கிறார் என்னுடைய மகன் நீட் தேர்விற்காக பயிற்சி எடுத்து கொள்ள 20 இலட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். இதை ஒரு ஏழை மாணவனால் முடியுமா எனவும், அதற்கு ஆளுநர் பதில் கூறாமல் வேறு எதையோ பேசுவது எப்படி எடுத்து கொள்வது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு அளிக்கப்படும்” என அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 1989-இல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? - திருநாவுக்கரசர் எம்பி