டெல்லி : நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாவதத்தில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, திருக்குறள் திருவள்ளுவர் குறித்து உலக நாடுகளில் பேசும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு உரியதை இதுவரை செய்யவில்லை என்று கூறினார்.
பெரும்பான்மை அரசு நாடாளுமன்றத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் நல்லது அல்ல என்றும்; இருப்பினும் பிரதமர் மோடியை அவைக்கு வரவழைக்கவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்றும் டி.ஆர். பாலு தெரிவித்தார். வாக்குறுதி கொடுக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ஒரு செங்கல் கூட எழுப்பப்படவில்லை என்று கூறினார்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை வாய்திறக்க வைக்க நம்பிக்கையில்லா தீர்மானம் என்றும், நாட்டு மக்களுக்கு 15 லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்த பிரதமர் மோடி ஒரு ரூபாய் கூட தரவில்லை என்றார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும்; 5 கோடி வேலைவாய்ப்புகள் ஒழிக்கப்பட்டு உள்ளதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 80 டாலருக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படும் நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான விலை விண்ணை முட்டும் அளவுக்கு மத்திய அரசு கொண்டு சென்று உள்ளதாக டி.ஆர். பாலு எம்.பி. தெரிவித்தார். இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது.
இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மணிப்பூரில் காணப்படும் வன்முறைச் சம்பவங்கள், இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை என்று டி.ஆர். பாலு எம்.பி தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வரும் அதேநேரத்தில், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்கள் மணிப்பூரில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளதாக டி.ஆர். பாலு கூறினார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.
அதேபோல் இலங்கை அரசிடம் இருந்து கச்சத்தீவை பெறும் தீர்மானத்தில் மத்திய அரசு தோல்வியைத் தழுவியதாகவும், சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பது காங்கிரஸ் - திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான் காரணமா என்றும் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.
மகாபாரதத்தில் அர்ஜூனனிடம், போரில் உன் நண்பர்களையோ, உறவினர்களையோ வீழ்த்தவில்லை; மாறாக அவர்களிடம் உள்ள தீமைகளையே வென்றதாக கிருஷ்ணர் கூறியது போல், பிரதமர் மோடி உள்பட எதிர்வரிசையில் அமர்ந்து உள்ள தன் பழைய நண்பர்களிடம் உள்ள தீமைகளை வீழ்த்தவே திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.
குஜராத்தில் நிகழ்ந்த வன்முறையைப் போல் தற்போது மணிப்பூரில் நிகழ்வதாகவும், குஜராத் வன்முறையில் ராஜதர்மத்தை கடைபிடிக்க வாஜ்பாய் கூறியதையே தற்போதைய அரசிடம் கூற விரும்புவதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.
இதையும் படிங்க : மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் எம்.பி. இடைநீக்கம்.. எஞ்சிய கூட்டங்களில் பங்கேற்க தடை!