சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி சார்பாக ஏழை எளிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை அத்தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீட் தேர்வு குறித்து உதயநிதி ஸ்டாலின்:
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்க உரிமை உள்ளது என்பதுதான் எங்களின் எண்ணம். நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மனு ஒன்றை அளித்துள்ளோம். திமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு குறித்து தெரிவித்திருந்தோம். நீட் தேர்வு குறித்து விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார்.
சேப்பாக்கம் தொகுதியில் தடுப்பூசி தட்டுப்பாடு:
தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும்போது, சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாரோ தேவையில்லாத செய்திகளை பரப்புகின்றனர். பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இந்த தொகுதிக்கு மருந்துகளை அளிக்கின்றன. தடுப்பூசியை பெற்றுத்தர முடியாதவர்கள்தான் இதுபோன்று பேசுகின்றனர்” என்றார்.
இசையும் படிங்க: 21 எழுத்தாளர்களுக்கு விருது!