மதுரையைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், மருத்துவருமான சங்கரபாண்டியன், திமுகவுக்கு எதிரான கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்துள்ளார். மேலும், மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ மூர்த்தி ஊழலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், எரிச்சலடைந்த எம்எல்ஏ மூர்த்தி கடந்த 22ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதுடன், சங்கரபாண்டியனையும், அவரது மனைவியையும் செருப்பால் அடிக்க முயன்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன், மதுரை ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து மூர்த்தி மீது 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் தனக்கு முன் பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூர்த்தி மனுதாக்கல் செய்தார். தற்போது, இந்த மனு மீதான வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியனை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களாக உள்ளன. தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக சங்கர பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், மதுரை ஊமச்சிகுளம் காவல் நிலையத்த்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
புகார்தாரர், சங்கரபாண்டியன் வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளதாகவும், இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கவும் கோரப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையை வரும் ஜூலை 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தியை கைது செய்யக்கூடாது என காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அலுவலர்கள் வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள் - லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்