சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
"தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழலில் எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கைளை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
1. சுமார் 15 ஆயிரம் கூலித் தொழிலாளர்கள், லட்சக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடும் கோயம்பேடு சந்தையை சென்னை மாநகராட்சி கணக்கில் எடுத்து தடுப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
2. கடந்த நான்கு நாள்களாக அரசு நிர்வாகங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்தும் "கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்" என்பதை போல் தானே?
3. சென்னையில் திரு.வி.க. நகர், ராயபுரம் மண்டலங்களில் உள்ள 30 வட்டங்கள், கோயம்பேடு வட்டம் ஆகியவற்றை மிக ஆபத்தான வட்டங்களாக அறிவித்து நாம் கடந்த பேரிடர் காலங்களில் செய்ததை போல, குறிப்பிட்ட வட்டங்களுக்கும் மற்ற மண்டலங்களுக்கும் தனித்தனி ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் Nodal officer-களாக நியமிக்காதது ஏன்?
இந்த வட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, சில மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளன. (உதாரணத்திற்கு வார்டு எண் 77-ல் மட்டும் 149 பேர்) அப்படி நியமித்தால் தொற்று பரவுதலை அனைத்து வகையிலும் அதிகாரம்படைத்த அவர்களால் தடுக்க முடியுமே?
4. சென்னையில் மண்டல வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை எனப் பிரிப்பதை, வட்ட வாரியாக செய்தால் Micro Planning மற்றும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்குமே? சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் ஒரு தொற்றாளர் கூட கண்டறியப்படவில்லை என்பது உண்மைதானே ?
5. கரோனா பேரிடர் சமயத்தில் சேவைத்துறைகளை ஒருங்கிணைத்து அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளாதது ஏன்?
6. சென்னையில் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளாளர்கள் வாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளார்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள் தானே? அப்படிப்பட்டவர்கள் பெரும்பகுதியாக வசிக்கின்ற வடசென்னையில் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் சிக்கல் இருப்பதை தாங்கள் உணராதவரா என்ன?
7. அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் முதலான தொண்டு நிறுவனங்களோடு இணைந்து ஒரே நாளில் 155 "மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை" நடத்தி சென்னை மாநகராட்சி முதன்முறையாக 2007-ல் 'லிம்கா' சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததைக் கருத்தில்கொண்டு, அத்தகைய தொண்டு நிறுவனங்களை இதுபோன்ற கஷ்டமான சமயங்களில் பயன்படுத்திக்கொள்வது சரியாக இருக்குமல்லவா?
8. சென்னையின் பாதிப்பு எண்ணிக்கை 1200ஐ தாண்டி போகும் நேரத்தில் நகரின் மிக ஆபத்தான வட்டங்களில் ராணுவம் மற்றும் அவர்களின் மருத்துவத் துறையை பயன்படுத்த யோசிக்கலாம் அல்லவா?
9. வரலாறு காணா பேரிடர் நேரத்திலும் அரசின் நிவாரண பொருள்களை ஏழை-எளியோருக்கு வழங்கும்போது ஆளும்கட்சியைச் சேர்ந்த 'வட்டம் - பகுதிகளை' கூட்டுச்சேர்த்துக் கொள்வது நியாயமா?
10. 98 சதவீதம் பேருக்கு எவ்விதமான அறிகுறியும் இல்லாத நிலையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சொன்ன தாங்கள், அத்தகையவர்களை தனி விடுதிகளில் வைத்து கண்காணிப்பதுதானே சரியாக இருக்கும்?
11. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் முதலானோருக்கு தொற்று ஏற்படுவதைப் பார்க்கும்போது அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களில் குறைபாடுகள் இருப்பதை உணரமுடிகிறதா? இல்லையா?
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!