சென்னை: டிபி சத்திரம் வி.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் (55), திமுகவில் 102ஆவது வார்டு அவை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், சம்பத்குமாரும், அவரது மகன் கோபிநாத்தும் நேற்று (ஆக 18) இரவு தனி தனி வாகனத்தில் இருசக்கர வாகனத்தில், அண்ணா நகர் காவல் நிலையத்தை கடந்து தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்
அப்போது, கோபிநாத்திற்கு அலைபேசியில் அழைப்பு வந்ததால், தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பேசியுள்ளார். இதனால் அவரது தந்தை சம்பத்குமார் மட்டும் தனியாக சென்றுள்ளார்.
அந்தசமயம் சம்பத்குமாருக்கு எதிரே வந்த இருசக்கர வாகனம், அவரை மோதியுள்ளது. இதையடுத்து ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், கீழே விழுந்த அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். மேலும் இருசக்கர வாகனத்தில் கும்பலும் சேர்ந்து, போக்குவரத்து மிகுந்த அந்த சாலையில், சம்பத்குமாரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
தந்தையின் அலறல் சத்தம் கேட்ட கோபிநாத், சம்பவ இடத்திற்கு செல்வதற்குள், கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய அண்ணா நகர் காவல் துறையினர், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர். மேலும் சம்பத்குமாரின் மகன் கோபிநாத் கொடுத்த தகவலின்படி கொலையாளிகளை தேடி வந்தனர்.
பொய் புகார்
அதுசமயம் செனாய் நகர், கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த டொக்கா ஹரிகுமார், பிளாக்பெரி மோகனவேல், ஆடியோ நவீன், ஜங்குபார் ஸ்ரீதர் என அடைமொழியோடு வந்து நான்கு நபர்கள், அண்ணாநகர் காவல் நிலையத்தில் அவர்களாகவே சரணடைந்துள்ளனர். இவர்கள் நான்கு பேர் மீதும் இதற்கு முன்பு எந்த குற்ற வழக்கும் இல்லை.
இவர்களிடம் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் கொலையான சம்பத்குமாரும், அவரது சகோதரரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கொலையாளிகளில் ஒருவரான ஹரிகுமாரின் அப்பா, அண்ணன் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும் சம்பத்குமாரும், அவரது மகன் கோபிநாத்தும் தங்களை கஞ்சா விற்பனை செய்து தர வேண்டும் என அடிக்கடி மிரட்டினர். சொன்னபடி கேட்கவில்லை என்றால் காவல் நிலையத்தில் தங்கள் மீது பொய் புகார் கொடுத்துவிடுவதாகவும் கூறினர்.
ரவுடியை காட்டி கொடுத்தல்
இதையடுத்து நாளுக்கு நாள் சம்பத்குமார், அவரது மகன் கோபிநாத் ஆகிய இருவரின் தொல்லை அதிகரித்ததால், சம்பத் குமாரை கொலை செய்ததாக, கொலையாளிகள் நான்கு பேரும் காவல் துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் தரப்பில் விசாரித்ததில், சம்பத்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. திமுகவில் பொறுப்பில் உள்ள சம்பத்குமார் அந்தப் பகுதியில் காவலர்களுக்கு தகவல் அளிப்பவராகவும் (POLICE INFORMER) இருந்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு சம்பத்குமார் வீட்டிற்கு அருகில் வசிக்கும் விநாயகம் என்பவரின் வீட்டில் காஞ்சிபுரம் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த லெனின் என்ற ரவுடி பதுங்கி இருப்பதை தெரிந்து கொண்ட சம்பத்குமார், காஞ்சிபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து லெனினை பிடித்துக் கொடுத்துள்ளார்.
கொலையின் பின்னணியில் யார்?
இதனால் விநாயகம் குடும்பத்தினருக்கும், சம்பத்குமாருக்கும் கடந்த ஒரு வருடமாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதால், கொலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய, விநாயகம் குடும்பத்தினரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொலையாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்துவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய ரகு உள்பட 3 பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லியில் ஓடும் காரில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்: இரண்டு பேர் கைது!