திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், "சட்டப்பேரவைக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது வன்மத்துடன் முதலமைச்சர் பழனிசாமி நீட் தேர்வு நடப்பதற்கும் மாணவமணிகளின் உயிர்ப்பலிகளுக்கும் திமுக மீது பழி போடுகிறாரே.
அதற்கு திமுக எந்தப் பதிலும் சொல்லவில்லையே என்று திமுக தோழர்களும், ஆதரவாளர்களும், ஏன், பொதுமக்களுமே கூட நினைக்கக்கூடிய கட்டாயத்தைத் திட்டமிட்டுத் திணிக்கிறது அதிமுக அரசு.
ஆறுமாத கால கரோனா ஊரடங்கால், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுக ஆட்சியில் நடந்த இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வாயிலாகத் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.
ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி வருபவர்கள் எதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சிதான் காரணம் என்று சொல்வது, அவர்களின் அலட்சியத்தையும் அக்கறையற்ற தன்மையையுமே காட்டுகிறது.
ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றி, உரத்த குரலில் பொய்களைப் பேசி, பரப்பிட நினைக்கும் அதிமுக அரசின் கபடவேடமும், கண்மூடித்தனமான நாடகமும், அதிகக் காலம் நீடிக்காது. ஆட்டம் முடியும்... ஆறு மாதத்தில் விடியும்...! சட்டப்பேரவை நாடகத்திற்கு மக்கள் மன்றம் திரைபோடும்" என்று தெரிவித்துள்ளார்.