இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏழை, எளிய, கிராமப்புற, நகர்ப்புற மக்களுக்கு எதிரான நீட் தேர்வு முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும். நீட் தொடர்பான மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்து, அந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன என்ற தகவல்கள் ஆதாரப்பூர்வமாக வெளியான போதும், அதை மூடி மறைப்பதிலேயே முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு குறியாக இருந்தது.
அந்தச் சட்ட மசோதாக்களின் தற்போதைய கதி என்ன என்பது குறித்து இப்போதாவது தமிழ்நாடு மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், கொள்கை அளவில் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளாத தமிழ்நாடு அரசோ, முதலமைச்சரோ... இந்தத் தலையாய பிரச்னையில் கவனம் செலுத்தாமல் பாராமுகமாக இருந்து வருவதில் இருந்தே அவர்களுடைய உள்நோக்கம் ஊருக்குத் தெரிந்துவிட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, நீட் தேர்வை நிராகரித்து, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பிரகடனப்படுத்த வேண்டும். அதேபோல் ஏழு தமிழர்களை விடுவிப்பது தொடர்பான கோப்புகள் ஆளுநர் மாளிகையில் பல ஆண்டுகளாகக் குளிர்பதனப் பெட்டியில் தூங்கிக் கொண்டிருப்பதைப் போல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு முடிவும் அமைந்துவிடத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கப் போகிறதா அல்லது மாநில அரசின் உரிமையைச் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து தட்டிக் கேட்கப்போகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளத் தமிழ்நாடே ஆவலாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...திமுகவினர் மீதான குட்கா வழக்கு: உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி!