இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் உள்ளூர், சிறப்புச் சட்டங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறையே 4.20 லட்சம், 4.99 லட்சம் என்று உயர்ந்து விட்டன. குற்றச் செயல்களும் 18.61 விழுக்காடு அதிகரித்து விட்டன. கொலைக் குற்றங்களில் சென்னையில் 11.69 விழுக்காடும், கோவையில் 47.62 விழுக்காடும் அதிகரித்து, மாநகரம் இரண்டிலும் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற ஆபத்தான சூழலை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில்; கோவை 40.79, சென்னை 18.54 விழுக்காடு அதிகரித்துள்ளது. பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநகரங்களாக சென்னையும், கோயம்புத்தூரும் மாறியுள்ளன. மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாமல், அதிமுக ஆட்சி தடுமாறுகிறது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 17.74 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.
மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் 2018இல் மட்டும் மூன்றாயிரத்து 162 குற்றங்கள், அவர்களுக்கு எதிரான வன்முறையில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது மாநிலமாக மாறியுள்ளது. அனைத்திற்கும் மேலாக, காவலர்கள் பாதுகாப்பின்போது நிகழும் மரணங்களில், இந்தியாவிலேயே குஜராத்திற்கு அடுத்தப்படியாக, தமிழ்நாடு இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்குக் காரணமாகி - மிகச்சிறந்த தமிழ்நாடு காவல்துறையை தங்களுடைய ஆதாயத்திற்காக அரசியல் மயமாக்கி - அதை கட்சி சொன்னபடி கைப்பாவையாக மாற்றியுள்ளது. இன்றைக்கு மக்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பற்ற ஆபத்தானதாக இருக்கும் அதிமுக ஆட்சி, மாநிலத்தின் பொருளாதார, தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி; அமைதிக்கும், மக்களின் பாதுகாப்பிற்குமே மிகப்பெரிய சாபக்கேடு. தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்யத்திற்கு மாநில அளவிலான பெர்மிட் வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி இது” என்று குறிப்பிட்டுள்ளார்.