சென்னை தெற்கு மாவட்ட திமுக ஐடி விங்க் பிரிவு நிர்வாகி தினேஷ் என்பவர் நேற்று (நவ.21) அசோக் நகர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் , 'தான் தகவல் தொழிற்நுட்பப் பிரிவில் பொறுப்பு வகித்து வரும் நிலையில் முகநூல், டிவிட்டர், இஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும், இந்நிலையில் தனது நண்பர்கள் இருவருடன் டிவிட்டர் கணக்கில் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
அப்போது 'கட்டெறும்பு பிஜேபி' என்ற டிவிட்டர் கணக்கில் திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி மற்றும் தற்போதைய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோரின் இழிவாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய காணொலியுடன் இணைந்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பதிவைக் கண்டு, தாங்கள் மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ள அவர், கட்சியின் விதிமுறைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றும் விதமாக சட்ட ரீதியாக இதைக்கொண்டு செல்ல எண்ணி புகார் அளிக்கிறோம்.
இப்புகாரை அடிப்படையாகக் கொண்டு அந்த டிவிட்டர் கணக்கை முடக்கி, அதை பயன்படுத்தி வந்தவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இப்புகார் தொடர்பாக அசோக் நகர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு