பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளருமான சி.டி. ரவி கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில், "திமுக, கூட்டணி கட்சியினருக்கு எனது வாழ்த்துகள். மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். புதிய அரசுக்கு எங்களது ஆதரவு இருக்கும்.
பாஜகவினர் கடுமையாக உழைத்தோம். ஆனால் அது வாக்குகளாக மாறவில்லை. பாஜக தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகள். முன்பைவிட பாஜகவினர் இனி அதிகம் உழைப்போம். எடப்பாடி பழனிசாமி , ஓ. பன்னீர்செல்வத்திற்கு நன்றி.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து இப்போது எதிர்க்கட்சிகளுக்குச் சந்தேகம் இருக்காது என நினைக்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக பாடுபடும்.
பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் கால்பாதித்துள்ளது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜக சிறப்பாகப் பணியாற்றியுள்ளது.
திமுக இந்துக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிரானது. சில ஆண்டுகளில் தமிழ்நாடு மக்கள் இதை உணர்வார்கள். வேல் யாத்திரை மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை" எனக் கூறினார்.