இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''ஜனநாயக நாட்டில் மக்களின் நம்பிக்கையை ஓர் இயக்கம் பெறுவதும், அதனைத் தக்கவைத்துக் கொள்வதும் சாதாரண விஷயமல்ல. திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசி, இல்லாத காரணங்களை முன் வைத்து நம்மை வீழ்த்தி விடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.
இது இன்று, நேற்றல்ல. தொடக்க காலத்திலிருந்தே இந்தச் சதிகளை முறியடித்து நாம் வென்றிருக்கிறோம். ஆதிக்கம் என்பது பல நிலைகளைக் கொண்டது. அத்தனை நிலைகளுக்குள்ளும் ஊடறுத்து, ஒடுக்கப்படுகிற, அடக்கப்படுகிற, ஓரடங்கட்டப்படுகிற மக்களின் பக்கம் நின்று அறப்போராட்டங்கள் நடத்தி ஆட்சி செய்கிற வாய்ப்பு அமைந்தபோது, சட்டத்திட்டங்களை வகுத்து உரிமைகளை மீட்டுத் தந்ததே திமுகவின் வரலாறு.
இந்து விரோதிகள் என திமுகவின் மீது விமர்சனம் செய்து நமது வளர்ச்சியைத் தடுத்திடலாம் என்ற பழமையான சிந்தனையின் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடக்கிறது.
இதனால் பாதிக்கப்படும் பெரும்பான்மை இந்து மக்களின் உரிமைக்காக உச்ச நீதிமன்றத்திலும் திமுக சட்டப்போராட்டம் செய்துகொண்டிருக்கிறது. எந்த மதத்தவராக இருந்தாலும், நீதி கிடைக்கப் போராடும் இயக்கம் திமுக. எங்கு எது நடந்தாலும் அதனோடு திமுக மீது பழிசுமத்திட ஆள்பிடித்து வைத்திருக்கிறார்கள்.
அரசியலமைப்பு உரிமைகள் பறிபோகும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலம் இது! கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண் நிலங்கள், தொழிற்துறை, வணிகர் நலன், மாநில உரிமைகள், கருத்துரிமைகளைப் பாதுகாக்க, அறப்போர்க் களத்தைக் கட்டியமைப்போம்; அக்கப்போர்க் களங்களைப் புறக்கணிப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா , ஜிடிபி, சீன விவகாரம்... மோடியின் பொய் பட்டியல்