தன்னுடைய புரட்சிகர கவிதைகளாலும், பாமர மக்களுக்கான எழுத்து நடையினாலும் அனைவரையும் கவர்ந்தவர் மகாகவி பாரதியார். நவீன தமிழ்க் கவிதைகளின் முன்னோடியான இவர் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் நாள் பிறந்தார்.
இன்று அவருடைய 139ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனையொட்டி பாரதியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"தமிழ் மொழியின் பெருமையை 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்று உலக மொழிகளுடன் ஒப்பிட்டு சிறப்பித்த மகாகவி பாரதியின் இல்லத்தை அரசு இல்லமாக்கி, சென்னையில் அவரது சிலையை நிறுவி சிறப்பித்தது திமுக அரசு.
'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற அவருடைய வரிகள் தற்போதைய நாட்டின் நிலைமையை நினைவூட்டுகிறது. தமிழையும், மக்களின் நெஞ்சுரத்தையும் தனது பாடல் வரிகளின் மூலம் வளர்த்த பாரதியின் புகழ் வாழ்க" என ட்வீட் செய்துள்ளார்.