இனத்தின் விடுதலைக்காக, தன்மான வாழ்விற்காக, மக்களின மீட்சிக்காக படைவரிசை எழுப்பிய வெண்தாடிக் கிழவனின் பாசறையில் பட்டைத் தீட்டப்பட்ட திராவிட இயக்க அறிவாயுதம் ஒன்று நீங்கா துயில் கொண்டிருக்கிறது இன்று!
அரசியலில் பெரியாரின் மாணவனாக, தொடங்கி அண்ணாவின் ஆழமான அன்பிற்குரிய தம்பியாக, கலைஞர் கருணாநிதியின் உற்ற உயிர்த் தோழனாய், இனப்பகை இந்தி - இந்தியத்தின் தத்துவ எதிரியாய், தமிழ் மொழி இன பண்பாட்டுத் தளங்களில் அறிவுசார் இளந்தலைமுறையை உருவாக்கிய நடமாடும் ”இனமான” பேராசிரியராய் திகழ்ந்த திராவிட இயக்கத்தின் முன்னத்தி ஏர் என இப்படி ஒரு பெரும் பொதுவாழ்வை வாழ்ந்த பேரா. அன்பழகன் இன்று நம்மிடையே இல்லை.
ராமையாவிலிருந்து அன்பழகனாக மாறியது தன்மானம், அன்பழகனில் இருந்து திராவிட இயக்க பேராசிரியர் அன்பழகனாக மாறியது இனமானம்” இப்படி ஒரே வரியில் திராவிட இயக்க முன்னோடியான அவருடைய வரலாற்றையும் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் எளிமையாக சொல்லிவிட முடியும். அதெப்படி ஒருவரின் வரலாற்றையும் ஒரு இயக்கத்தின் வரலாற்றையும் ஒரே வரியில் சொல்ல முடியும் என்கிறீர்களா ?
ஒரு இயக்கத்தின் தொடக்கத்திலிருந்து தனது முடிவுவரை அதே கொள்கை, அதே கோட்பாடு, அதே சிந்தனை, அதே செயல்வேகம் என வாழ்ந்த ஒருவரை வேறு எப்படி அடையாளப்படுத்த முடியும் !?
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைக்கும் அடிமைகளாக கடவுளின் பெயரால், கடவுள் தந்த மனுநீதியின் பெயரால், வர்ணாஸ்ரம சாதியின் பெயரால் இனமானம், தன்மானம் மறந்து வாழ்ந்த மக்களை உசுப்பி எழுப்ப, விழிப்படைய செய்ய தோன்றிய எண்ணற்ற தலைவர்களில், அவர்தம் இயக்கங்களில், செயல்களில் பல மாறுதல்களை இந்தியா கண்டிருக்கிறது.
அத்தகைய பெரும் மாற்றங்களுக்கு அடித்தளமாக என்றென்றும் தனியிடம் வகிக்கும் தமிழ் மண்ணில், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு மறுமலர்ச்சி மீண்டும் கிளர்ந்தது. இந்த முறை வெறுமென சமூக மாற்றம் என்றில்லாமல் அரசியல் அதிகாரம் என்ற நோக்கத்தை வைத்து வழிநடத்தும் புதிய எழுச்சி, புதிய இலக்கு, புதிய பயணம் என புது பாய்ச்சலுக்கு தமிழ் இளையோர்களை ஈர்த்தது. பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் தொடங்கி திராவிடர் கழகமென பல பெயர்களில் அது அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றில் கொள்கை சமூகநீதி, சமத்துவம், இனமானம், விடுதலை என்ற ஒரே திசைவழியிலேயே இருந்தது.
காங்கிரஸ்காரர்களின், கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்க கீழைத்தஞ்சையின் அண்ணாமலைப் பல்கலையில், கழகத்தின் கொடியை பறக்க வைத்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை பரப்பிய மாணவர் தலைவர் அன்பழகன், பெரியாரையும் அண்ணாவையும் தனது தலைமையின் கீழ் பேச வைத்து மாணவர்களின் மனங்களில் இயக்கக் கொள்கைகளை விதைத்தார். கூட்டம் நெடுக அண்ணாவின் பேச்சுக்காக காத்திருக்க, துல்லியமான தரவுகளைக் கொண்டு சொக்கவைத்து சொல்லித்தரும் பேச்சை வைத்து அண்ணாவையே தன் பேச்சிற்காக ஏங்க வைத்தது அன்பழகன் அந்த அரசியல் பேச்சு.
கல்லூரிப் படிப்பு முடிந்து, இயக்கத்துக்காக பணியாற்றத் துடித்த அன்பழகனை தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும்தான், "படித்த இளைஞன் நீ ஆசிரியனாக இரு" என அறிவுரை சொல்லி அனுப்பி வைக்க, தந்தை மற்றும் அண்ணன் பேச்சை தட்டாமல் அதன்படி பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே அறிவுத்தளங்களில் அரசியல் குழுக்களை உருவாக்கினார்.
திராவிடத் தந்தை நடேசனார், வெள்ளுடை வேந்தர் தியாகராயர், டி.எம். நாயர், அயோத்திதாசர் அமைத்த இயக்கத்தின் நிலப்பரப்பை, முத்தையா முதலியார், அறிவாசான் தந்தை பெரியார் ஆகியோர் அரசாக ஆக்கினர். அதனை எஃகுக் கோட்டையாக மாற்ற நினைத்த பேரறிஞர் அண்ணா, பொருளாதார அரசியல் விடுதலையோடுதான் முழுமையாக்க முடியும் என நினைத்தார். அதற்கு அவருக்கு திராவிடர் கழகத்தோடு ”முன்னேற்றம்” அவசியமாகத் தோன்றியது.
திராவிடர் கழகத்தின் தளபதியான பேரறிஞர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனராக மாறியதற்கும் மூலமாக இருந்த 'மண்ணடி தெருவின் கடைசி வீட்டு மேல் மாடி’ அரசியல் வட்டத்தில் அன்பழகனும் ஒருவர். அண்ணாவுக்கும் திமுகவுக்கும் பலமாக இருந்த பல மாணவர் தம்பிகளில், மூத்த தம்பியாக இருந்து ஆரிய மாயைக்கு எதிரான அண்ணாவின் கருத்து போருக்கு ஆலோசனை சொல்லும் உள்வட்டங்களில் முதல் சுற்றுத் தளபதியாக நின்றவர் அன்பழகன்.
அண்ணா, ”பேராசிரியர் பணியை துறந்து அரசியலுக்கு வா தம்பி !” என அவரை அழைக்கும் அளவிற்கு இந்த அண்ணன் தம்பி உறவு இறுக்கமாக இருந்தது. 1957ஆம் ஆண்டில் தி.மு.க பங்கேற்ற முதல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக அன்பழகன் வெற்றிபெற்றார்.
அண்ணாவின் மறைவுக்கு பின்னர், நாவலர் அணி - கலைஞர் அணி பிரிந்தபோது, கழகத்தை வழிநடத்த தன் கல்லூரி நண்பர், தன் தமிழ் இலக்கிய மன்றத் தோழர் நெடுஞ்செழியனைவிட கருணாநிதிதான் சரியான நபர் என முடிவெடுத்தார். தன் வாழ்நாள் முழுவதும் அதன்படி தன்னைவிட இளையவரான கருணாநிதிக்கு உற்றத் தோழனாய், அரசியல் ஆசிரியனாய், வழிகாட்டியாய் வாழ்ந்தும் காட்டினார்.
எம்.ஜி.ஆர் தி.மு.கவை உடைத்து தனிக்கட்சி தொடங்கியபோது, அண்ணாவின் தம்பிகள் பலரும் அவருடன் சென்றனர். அதுமட்டுமின்றி பேராசிரியர் அன்பழகனையும் தன்னுடன் இழுக்க எம்.ஜி.ஆர் முயன்றார். ஆனால், கொள்கைக் கரத்தையும், கருணாநிதியின் கரத்தையும் பற்றி அன்றிலிருந்து கலைஞர் இறக்கும்வரை துணையாய் நின்றவர் அன்பழகன் மட்டுமே! கருணாநிதி இறப்புக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அன்பழகன், கருணாநிதி சடலத்தின் முன்நின்றதைப் பார்த்த அந்தக் காட்சி துரியோதன-கர்ணன் நட்புக்கு சாட்சி!
சட்டப்பேரவை உறுப்பினர் பதவி, மேலவை உறுப்பினர் பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, சட்டப்பேரவையில் திமுகவின் துணைத் தலைவர் பதவி, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவி, தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை, கல்வித்துறை, நிதித்துறை அமைச்சர் பதவிகள் என தன்னைத் தேடி வந்த அனைத்து பதவிகளையும் பொறுப்புகளாகவே கருதினார்.
கொள்கை வழித்தவறி இயக்கம் போனபோதெல்லாம் அதனை நெறிப்படுத்தியவர் அன்பழகன். “திராவிட இயக்கக் கொள்கைகளைப் பற்றி பேசுவதை விட்டு, அரசியல் அதிகாரம் பற்றி மட்டும் பேசி, அதன் போக்கிலேயே கட்சி வளைந்தபோதெல்லாம் கட்சியை கொள்கையின் பக்கம் திருப்பி, இப்போதும் எங்களுக்கெல்லாம் ஒரு ஆசிரியராகச் செயல்படுபவர் பேரா. அன்பழகன்” என கருணாநிதி மேடையில் சொல்லியதைவிடவா பேராசிரியரின் கொள்கைப் பற்றுக்கு எடுத்துக்காட்டு வேண்டும்?
இவை எல்லாவற்றையும்விட, அடுத்த தலைமுறைக்கான அரசியல் சிந்தனையாளர்களை உருவாக்கியதில் பேராசிரியருக்கு வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உண்டு. ஏனெனில், பெரியாருக்கு பிறகு அந்தப் பணியைச் செம்மையாக செய்த ஒரே திராவிட இயக்க ஆளுமை பேராசிரியர் அன்பழகன் மட்டுமே.
மாணவராகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய பேராசிரியர் அன்பழகன், தமிழ்நாடு அரசியலில் பாதம் வைக்க வந்த பலரை வெற்று மேடைப்பேச்சாளராக மட்டுமே வீணடிக்க விரும்பாதவர். தன்னால் ஈர்க்கப்பட்டு அரசியலை நோக்கி வந்த பல மாணவர்களை பல்துறைகளில் ஆளுமைகளாக மாற்றிய அரசியல் பேராசிரியராகவே இருந்து வந்திருக்கிறார்.
மொழியியல், பண்பாட்டியல், பொருளாதாரவியல் என பலத்தளங்களில் அவரால் உருவான ஆய்வாளர்கள் ஏராளம். பண்பாட்டு மீட்சி அடையாளமான பேராசிரியர் க. நெடுஞ்செழியன், ஜக்குபாய் அம்மா போன்றவர்களுக்கு இவர் ஒரு தாயுமானவராகவே இருந்திருக்கிறார். மாணவர்கள் அரசியலை நோக்கி வராத நிகழ்காலத்தில், இவரைப் போன்ற பேராசிரியர்கள் நிச்சயம் தேவைப்படுவதை யாரும் மறுக்க முடியாது.
இன்னும்சொல்லப்போனால், தமிழ்நாட்டின் அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா. இருப்பினும், நிறைவேறாத ஒரு கனவோடுதான் வங்கக்கடல் ஓரத்தில் “அண்ணா” உறங்கிக் கொண்டிருக்கிறார். அந்தக் கனவு இந்த “பேராசிரியர் தம்பி”க்கும் இருந்தது. அது பல்வேறு சமயங்களில் வெளிவந்ததை அரசியல் நுண்ணறிவாளர்கள் மட்டுமே அறிவர். அது தான் ‘தனித்தமிழ்நாடு’
தமிழ்நாட்டு விடுதலைக்காக போராடிய ஆயுதக்குழுக்கள் ஈழப் போராட்டத்தையொட்டி இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்திய ஒரு தாக்குதல் சம்பவம் பற்றிய விவாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எழுந்தபோது, “அவர்களின் வழிமுறைகளில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது. ஆனால், அவர்களின் உணர்வில் கோரிக்கையில் எங்களுக்கு 100% உடன்பாடு” என்று ஒரு குரல் முழங்கிவிட்டு அடங்கியது. அதுதான் அன்பழகன். அதுதான் அவரின் அரசியல்!
83 ஆண்டுகால பொதுவாழ்வின் இறுதிவரையிலும் தந்தை பெரியாரின் கொள்கையின் உறுதியும் அண்ணாவின் அரசியலில் மாறாத தம்பியாகவும் இருந்தவர். அதனால்தான் என்னவோ தமிழ்நாடு சட்டப்பேரவையில் ”தனித் தமிழ்நாடு” என 58 முறை தனது ஒரே பேச்சில் பேசினார்.
வரலாறு விசித்திரமானது, ஆரிய எதிர்ப்பு - வர்ணாஸ்ரம எதிர்ப்பு, பண்பாட்டு மீட்சி, வகுப்புவாரி இட ஓதுக்கீடு பிரதிநிதித்துவம், மொழி உரிமை போன்ற கோரிக்கைகளால் ஒரு நீண்ட நெடிய வரலாற்றின் போக்கினூடே பிறந்த நாட்டுரிமைக் கோரிக்கையை கைவிட நேர்ந்து காலவெள்ளத்தால் அது அழிக்கப்பட்டது. அதில் உறுதிப்பாடுகளும் லட்சியங்களும் கொள்கைகளும்கூட சிதைக்கப்பட்டன.
1938ஆம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழக்கமிட்ட திராவிட இளவரசர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தின் வரலாற்றை இளம்பருவத்தில் பதிந்த மாணவன் ஒருவனின் கிழப்பருவம், மனத்தின் அடியாழத்தில் இருந்துதான் நேசித்த ”தனித் தமிழ்நாடு” என்ற நிறைவேறா பெருங்கனவோடு முடிகிறது.
எந்தக் காலம் அவர்களிடமிருந்து அந்த வாய்ப்புகளை பறித்தனவோ அதே காலம் மீண்டும் திரும்பியிருக்கிறது. லட்சிய இளையோர் பட்டாளத்தை நினைவுக்கூர நிர்பந்திக்கிறது. அந்த இளைஞர் பட்டாளத்தில் பேராசிரியரும் ஒருவர்.
பாட்டன்கள், பாட்டிமார் விட்டுச்சென்ற பணி முடிக்க அழைக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறதா ?
காலம் பதில் சொல்லும்! கனவு நிறைவேறும்!
போய் வாருங்கள் ”இனமான” பேராசிரியரே...!