கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாடுகளுடனான விமானப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு கடந்த 5ஆம் தேதி அறிவித்தது.
அதன்படி, தற்போது வரை வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60,942 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். மேலும், மத்திய அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி வழங்கப்படாத நிலையில், இதனை எதிர்த்து திமுக சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், ”மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழ்நாடு அரசு வெளிநாடுகளுக்கான விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளதால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உணவு ,உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய அரசின் அதிகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது. மத்திய அரசின் அதிகாரத்தை மீறி முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்க அனுமதித்து உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : மருத்துவரின் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்கிய முதலமைச்சர்!