சென்னை: அரும்பாக்கத்தில் வசித்து வருபவர் மகாதேவ பிரசாத். இவர் திமுகவில் மாநில ஸ்டாலின் அணியின் பொருளாளராக உள்ளார். இந்நிலையில் மகாதேவ பிரசாத் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகிய இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள இல்லத்தரசிகளிடம் சிறு தொழில் செய்ய வாய்ப்பளிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி, அவர்களிடமிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் முன்பணமாக பெற்றுள்ளனர்.
அதற்காக கடந்த 2 மாதங்களில் சுமார் 500-க்கும் அதிகமான பெண்களிடம் 25 ஆயிரம் ரூபாய் முன்பணமாக பெற்றுள்ளனர். பின்னர் மகாதேவ பிரசாத் தம்பதி முதலீடு செய்த பெண்களிடம் சிறு தானியங்களை கொடுத்து பாக்கெட் செய்து தரும் படியும், அவற்றுக்கு மாத ஊதியமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5000 வரை தருவதாகவும் கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, 2 மாதங்கள் வேலை பார்த்த பின்பு அதற்கான ஊதியம் தராமல், கொடுத்த முன்பணம் என பல கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டு மகாதேவ பிரசாத்தும் அவரது மனைவியும் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரும்பாக்கம் காவல் நிலையம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாதேவ பிரசாத் வீட்டை சிலர் காலி செய்வதாக பாதிக்கப்பட்டோருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகையால் அவர்கள் மகாதேவ பிரசாத் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அங்கு வீட்டை காலி செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் அவர்களை பிடித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அவர்கள் சனிக்கிழமை காலையில் அரும்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் துறையினரும் எவ்வித உதவியையும் செய்யாமல் அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து புறப்பட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தனர். அங்கு வந்த அனைவரும் ஆணையர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி புகார் பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது. சிறுதொழில் செய்ய வாய்ப்பு அளிப்பதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தப்பி ஓடிய திமுக நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மோசடியில் ஈடுபட்ட திமுக நிர்வாகி மகாதேவ் பிரசாத் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ மீது இரு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். குறிப்பாக மோசடி செய்தல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள மகாதேவ் பிரசாத் வீட்டில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அவரது தாய் மூதாட்டியான கங்கா தனியாக இருந்த போது, ஒரு கும்பல் கட்டிப்போட்டு அரை நிர்வாணப்படுத்தி 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் பணம் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் மகாதேவ் பிரசாத் கம்பெனியில் வேலை பார்த்த மணிகண்டன் சம்பள பாக்கி தராததால் ஆட்களை வைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதும், அது தொடர்பாக தற்போது இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.15 லட்சம் மின்வயர் திருட்டு வழக்கில் திமுக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் கைது!