கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உணவு, மருந்து ஆகிய உதவிகளை வழங்க தமிழ்நாடு அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் தனித்தனியே மனு தாக்கல்செய்யப்பட்டன.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தாக்கல்செய்த பதில் மனுவில், தமிழ்நாட்டில கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின்கீழ், பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதற்கு ஒட்டுமொத்தமாக தடை ஏதும் விதிக்கப்படவில்லை எனவும், நிவாரண உதவிகள் வழங்க விரும்புவோர் மாவட்ட நிர்வாகத்தை அணுகி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், சமூக விலகலைப் பின்பற்றவும் மட்டும்தான் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், தற்போது மே 3ஆம் தேதிவரை தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், இந்த உத்தரவுகளை மீறுவது, அரசு நடவடிக்கைகளுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், அரசு பதில்மனுவில் சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், நிவாரண உதவிகளை வழங்க தடைவிதித்துள்ளதாகக் கூறி, அரசு நடவடிக்கைகளை குறுகிய நோக்கத்துடன் பார்க்கக் கூடாது எனவும், அரசியல் உள்நோக்கம் கற்பிக்கும்வகையில் திமுக, இதர கட்சிகள் சார்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
இதையும் பார்க்க: துரத்தி வந்த ட்ரோன்! தெறித்து ஓடிய இளைஞர்கள்!