இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் வழியில் நடைபெறும் தமிழ்நாடு அரசு சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் நம்பிக்கைக்குரிய அரணாக இருந்து சமத்துவ, சகோதரத்துவ கொள்கைகளை நிலைநாட்ட அதிமுக எப்பொழுதும் உறுதியாய் பாடுபடும்.
இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாவலனாகவும், அவர்களின் நலன் பேணும் நண்பனாகவும் செயல்பட்டுவருகிற அதிமுக அரசு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு தொண்டு செய்து வருகிறது.
* ஹஜ் புனித பயணத்திற்கான மானியத் தொகையை மத்திய அரசு நிறுத்தினாலும், அரசு ஆண்டுதோறும் ஹஜ் மானியமாக 6 கோடி ரூபாயை வழங்கிவருகிறது. 15 கோடி ரூபாய் மதிப்பில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என அறிவித்தது.
* தமிழ்நாட்டில் உள்ள மூவாயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 5,145 மெட்ரிக் டன் அரிசியை ரம்ஜான் மாதத்தில் வழங்கிவருகிறது.
* நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை வழங்கி வருகிறது.
* மாவட்ட ஹாஜிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பூதியம்.
* பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் வக்ஃபு நிறுவனங்களில் பழுது பார்த்தல், புனரமைப்புப் பணிகளுக்கு ரூபாய் 5 கோடி தொகுப்பு நிதி
* தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக குறைந்த வட்டியில் கல்விக் கடன், தனிநபர் மற்றும் சிறுகடன்கள் கழக அரசால் வழங்கப்பட்டுவருகின்றன.
* ஓய்வுபெற்ற உலமாக்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.
* வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியமாக வழங்கப்பட இருக்கிறது.
* கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூகப் பாதுகாப்பிலும், பொருளாதார மேம்பாட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு உதவிட இன்னும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த அரசு துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இஸ்லாமிய சமூகத்திற்கும், அதிமுகவிற்குமிடையே இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து, எல்லோரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட, இஸ்லாமியர்கள் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.
அஸ்ஸாம் மாநிலம் சம்பந்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) விவகாரம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே தவிர, அது நாடு முழுவதற்கும் உரியது அல்ல. சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அஸ்ஸாம் தவிர, இதர மாநிலங்களுக்கான நடைமுறை வேறெந்த மாநிலத்திற்கும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை.
இந்திய இறையாண்மையைக் காப்பாற்ற நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடைபெறும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் இயன்ற அளவு இணக்கமாய் இருந்து, தமிழ் நாட்டிற்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் அரசு செயல்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census), 1872ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின், 1948-ல் அதற்கென்று ஒரு தனிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2003ஆம் ஆண்டு, மத்தியில், திமுக அங்கம் வகித்த பா.ஜ.க. ஆட்சியின் போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய அடையாள அட்டைகள் (National Identity Card) வழங்குவதற்கு ஏதுவாக, குடியுரிமைச் சட்டம், 1955-ன்கீழ் (Citizenship Act,1955), குடியுரிமை விதிகள், 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. இந்த விதிகள் மூலம் குடிமக்களை பதிவு செய்து, அவர்களுக்கு ஒரு தேசிய அடையாள அட்டை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இந்த விதிகளின் கீழ், 201ஆம் ஆண்டு மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின் போது தான், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் (Census) ஒரு அங்கமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register - NPR) உருவாக்கப்பட்டது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR), இந்தியாவில் 6 மாதமோ அதற்கு மேலோ வசிக்கின்ற அனைத்து நபர்களின் விபரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி, குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின் படி பதிவு செய்யப்படுகிறது.
தாய்மொழி, தந்தை/தாயார்/துணைவர் பிறந்த இடம்/பிறந்த தேதி விபரம் மற்றும் ஆதார்/ கைபேசி எண் / வாக்காளர் அட்டை / ஓட்டுநர் உரிம எண் ஆகிய விபரங்கள், 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தமிழ் நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.
அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய்ப் பிரச்சாரங்களையும், விஷமச் செயல்களையும் புறந்தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். தமிழ்நாடு அரசு சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அனுமதிக்காது’ என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன' - முதலமைச்சர் பெருமிதம்!