திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " 2ஜி வழக்கு தொடர்பாக கோட்டையில் விவாதிக்க தயார் என கூறினேன். ஆனால் இன்றுவரை முதலமைச்சர் தரப்பில் இருந்து பதில் தராமல் மறைமுகமாக எனக்கு தகுதி இல்லாதவர்களை கொண்டு பேசி வருகிறார்.
2ஜி வழக்கில் நான் குற்றவாளி இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் உள்ள எந்த குற்றத்தையும் சிபிஐ நிரூபிக்கவில்லை. இந்த வழக்கில் எந்தவித தயக்கமும் இல்லாமல் அனைவரையும் நீதிபதி விடுதலை செய்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை வழக்கு மிகவும் நேர்த்தியாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக உள்ளது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு அப்படி இல்லை. மக்களாட்சி தத்துவத்தின் அடித்தளமாக அரசமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மன்னிக்க முடியாத படுகொலை என ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறியதற்கு எதிரான வகையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் செயல்பட்டதாக நீதிபதிகள் மனவேதனையுடன் கண்டனம் தெரிவித்தனர். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதை தான் நான் ஊடகங்களிடம் கூறினேன்.
இந்த விவகாரத்தில் எனக்கு தகுதி இல்லாதவர்களிடம் நான் விவாதிக்க தயாராக இல்லை. ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும் விளக்கம் அளிக்க தயார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 2ஜி விவகாரத்தில் திமுக மீது பொய் குற்றச்சாட்டை முதலமைச்சர் கூறி வருவதாகவும், 2ஜி வழக்கு குறித்து விளக்கமளிக்கவும், விவாதிக்கவும் தயாராக இருப்பதாக முதலமைச்சருக்கு மீண்டும் சாவல் விடுத்தார். எது, உண்மை, எது பொய் என்று ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளதாக அப்போது அவர் கூறினார்.
இதையும் படிங்க:'2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல மோசடிகளைச் செய்த திமுக ஊழலைப் பற்றி பேசலாமா?'