தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் கிரிராஜன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விக்கிரவாண்டியில் வன்முறையைத் தூண்டி பாமகவினர் உதவியுடன் வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கில் அதிமுகவினர் செயல்பட்டுவருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து இது குறித்த புகார் ஒன்றினை தேர்தல் அலுவலரிடம் அளித்துள்ளோம்.
மேலும் அதிமுகவினரின் போக்கை நிறுத்தி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். அதற்கு அவர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்" என்றார்.
இதேபோல், காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சூர்யபிரகாஷ் என்பவர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், "நாங்குநேரியில் மக்களவை உறுப்பினர் எச். வசந்தகுமாரை வாக்குச்சாவடிக்குச் சென்றதாகக் கூறி காவல் துறை அத்துமீறி கைது செய்துள்ளது. மேலும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக காவல் துறை செயல்பட்டுவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.