சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் திமுகவும் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க தூத்துக்குடி எம்.பி கனிமொழி தலைமையில் குழுவை அமைத்துள்ளது.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜன.19) வெளியிட்ட அறிவிப்பில், '2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு இக்குழுவில் வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என் ராஜேஸ்குமார் எம்.பி, மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் எம்.எல்.ஏ, அயலக அணிச் செயலாளர் எம்.எம் அப்துல்லா எம்.பி, மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மேயர் ஆர்.பிரியா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
திமுக அமைச்சர்கள் கே.என். நேரு, ஆர்.எஸ் பாரதி, எ.வ வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடங்கிய குழு, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சி பணிகளை ஒருங்கிணைக்கவும் மற்றும் மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதே போல் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துதற்கான குழுவின் தலைவராக டி.ஆர்.பாலுவும், குழு உறுப்பினர்களாக கே.என்.நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ. ராசா எம்.பி, திருச்சி சிவா எம்பி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்' அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளைஞரணி மாநாடு; படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!