தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தொகுதிகள் அடையாளம் காண்பதில் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சித்தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். "வேட்பாளர்கள் பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளோம். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், "எங்கள் வேட்பாளர் பட்டியல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். நாங்கள் கேட்கும் தொகுதிகளை வேறு சில கட்சிகளும் கேட்டுள்ளனர். விரைவில் முடிவு வெளியாகும்" என்றார்.
" மதிமுக போட்டியிடும் தொகுதிகளை பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பார் என்றும், இந்த பேச்சுவார்த்தையில் தங்களது தொகுதிகள் சுமூகமாக அடையாளம் காணப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா கூறினார்.
மேலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் தொகுதிகளை அடையாளம் காண அண்ணா அறிவாலயம் வர உள்ளனர்.
இதையும் படிங்க: விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த கமல்