சென்னை:தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 11 ஆண்டுகள் கழித்துச் சென்ற பிப்ரவரி மாதம் 19 அன்று 21 மாநகராட்சி, 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்தது. காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெரும்பாலான வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பல இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளைத் தாண்டி சுயேச்சை வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை 21 மாநகராட்சிகளின் 1,373 வார்டுகளில் 494 வார்டுகளை திமுக வசப்படுத்தியுள்ளது. அதிமுக 55 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் 21 நகராட்சிகளின் மேயர் பதவியைக் கைப்பற்ற திமுகவிற்கு வாய்ப்பு உள்ளது.
மொத்தம் உள்ள 138 நகராட்சிகளின் 3,842 வார்டுகளில் திமுக 1,579 வார்டுகளை வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி 122 நகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது. மேலும் 489 பேரூராட்சிகளின் 7,604 வார்டுகளில் திமுக 2,901 வார்டுகளில் வெற்றி பெற்று 328 பேரூராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது.
பெரும்பாலான இடங்களைப் பிடித்த அதிமுக
அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் மாநகராட்சிகளில் 91 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். நகராட்சியில் 453 வார்டில் வெற்றி பெற்று 4 நகராட்சிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. 952 பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்று 19 பேரூராட்சிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.
பிரதான கட்சிகளான திமுக அதிமுக கூட்டணிகளைத் தவிர்த்துத் தனித்துப் போட்டியிட்ட பாஜக, பாமக, நாம் தமிழர், தேமுதிக மற்றும் மநீம போன்ற கட்சிகளும் சில இடங்களில் வெற்றி அடைந்துள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் பிற கட்சிகளும் தங்களுக்கான இடத்தை நிலைநாட்ட இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.
மாநகராட்சி வார்டுகளில் தேமுதிக 6 வார்டிலும், நகராட்சி வார்டுகளில் 23 வார்டிலும், பேரூராட்சியில் 12 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மாநகராட்சியில் பாஜக 3 வார்டுகளிலும், நகராட்சியில் 27 வார்டிலும் பேரூராட்சியில் 50 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். மாநகராட்சியில் பாமக3 வார்டுகளிலும், நகராட்சியில் 28 வார்டிலும் பேரூராட்சியில் 41 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
அமமுக
தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளை அடுத்து சில முக்கிய கட்சிகளும் சில இடங்களைப் பிடித்துள்ளன. அந்த வரிசையில் நாம் தமிழர் இதுவரை 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் 2 வார்டுகளிலும், விஜய் மக்கள் இயக்கம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட இடங்களில் அமமுக வெற்றி அடைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியின் 15 வார்டுகளில் அமமுக 9 வார்டுகளை கைப்பற்றியது, இதன்மூலம் ஒரத்தநாடு பேரூராட்சியின் சேர்மன் பதவியைக் கைப்பற்றும் வாய்ப்பு அமைந்துள்ளது.
இதையும் படிங்க:அமமுக வெற்றி பெற்ற இடங்கள்!- ஒரத்தநாட்டை கைப்பற்றியது..