உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக சட்டத்துறை தலைவர் ஆர். சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மக்களவைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு தலைமையேற்ற கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுகள் தெரிவித்து, ஸ்டாலின் மிசா சிறை வரலாற்றை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தவறாக பேசியதை கண்டித்து உள்பட12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி, " ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் திமுக சட்டத்துறையை தமிழ்நாடு அளவில் கூட்டி தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிப்பது வழக்கம். அதுபோல், வரவுள்ள உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஆலோசித்தோம்.
திமுக உள்ளாட்சித்தேர்தலைச் சந்திக்க தயாராக உள்ளது. இந்தத் தேர்தலில் அரசு வார்டுப்பிரித்தது முதல் வாக்குப்பெட்டி அமைப்பது வரை அனைத்திலும் பல்வேறு குளறுபடிகளை அறிமுகப்படத்தவிருக்கிறது. இதனை எதிர்கொள்ள திமுக வழக்கறிஞர் அணி தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அழிந்து வரும் அடையாறுவை மீட்டெடுக்க முடியும் - ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!