சென்னை: தீபாவளிப் பண்டிகை வரும் 24ஆம் தேதி, திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை போக்குவரத்துத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 16,888 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இன்று மட்டும் 1,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து தினசரி இயக்கங்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்புப்பேருந்துகள் என மூன்று நாட்களுக்கு மொத்தமாக 10,518 பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கெனவே போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்கள் எளிதில் தங்களது சொந்த ஊர்களுக்குச்செல்லவும் ஏதுவாக சென்னையில் ஐந்து இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம், கே.கே. நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- மாதவரம் - செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
- கே.கே. நகர் - இ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
- தாம்பரம் - திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பேருந்துகளும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
- பூந்தமல்லி - வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
- கோயம்பேடு - மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
இதையும் படிங்க:தீபாவளி: சென்னையில் புதிய தொழில்நுட்பங்களுடன் 18,000 போலீசார் தீவிர கண்காணிப்பு