தமிழ்நாட்டில் வரும் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால், வெளி ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊர் செல்வது வாடிக்கையான ஒன்று. வழக்கம் போல் இந்த ஆண்டு தீபாவளிக்கு தொடர் விடுமுறை வருவதால் பெரும்பாலானோர் தற்போது முதலே சொந்த ஊருக்கு படையெடுத்து செல்கின்றனர்.
இந்நிலையில், வெளியூர் செல்லும் பயணிகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், கே.கே நகர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏற்பாடு செய்துள்ளது. பூந்தமல்லியை பொறுத்தவரை வேலூர், ஓசூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்வோர் பயணசீட்டுக்களை முன் பதிவு செய்வதற்கு கணினி முன்பதிவு மையம் நேற்று முதல் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் 30க்கும் அதிகமான பயணிகளே முன்பதிவு செய்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு குறித்து வெளியூர் பயணிகள் கூறுகையில், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் செல்ல பேருந்து இல்லை எனவும் பூந்தமல்லிக்குச் சென்றுதான் பேருந்து ஏற வேண்டும் என போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பூந்தமல்லிக்கு வரும் பேருந்தின் நேரம் குறித்து கேட்டால் அலுவலர்கள் முறையாக விளக்கம் கூறாமல் அலைகழிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். சிறப்பு பேருந்து குறித்து உள்ளூர் பயணிகள் கூறுகையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் வழக்கம் போல் இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் சென்னைவாசிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், தமிழ்நாடு அரசு சென்னை மக்களையும் கருத்தில் கொண்டு இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் திறப்பு!