சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடாக செலுத்தப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஊழியரை கைது செய்துள்ளது.
பாரமரிக்கப்படாத ஆவணங்கள்
இதுகுறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மூன்று குழுக்களை நியமித்தது. இக்குழுக்கள் அளித்த அறிக்கையில், ஆவணங்கள் முறையாக பராமரிக்காததால் மோசடிகள் நடந்துள்ளதாகவும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இழப்பீடு தொகை நிரந்தர வைப்பீடுகள் எத்தனை என்ற விவரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு எண்கள் குறிப்பிடாமல் இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்களும், போக்குவரத்து கழகங்களும் செலுத்தியுள்ளதாகவும், பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை சென்றடையவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆவணங்களை சரிபார்ப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
ஆவணங்களை ஆய்வு செய்ய உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ், அப்துல் குத்தூஸ் அமர்வு, மாநிலம் முழுவதும் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய, மாவட்ட நீதிபதிகளை நோடல் அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டனர்.
தலைமை நோடல் அதிகாரியாக உயர் நீதிமன்ற கூடுதல் பதிவாளர் சேதுராமனை நீதிபதிகள் நியமித்தனர். வழக்கின் விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: கடலில் எண்ணெய் கசிவை தடுக்கக்கோரிய வழக்கு; துறை அலுவலர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு