சென்னை: திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக அலுவலர்களாக பணிபுரியும் அலுவலர்களுக்கு அவர்களது சொந்த மாவட்டம் அல்லது விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் முதன்முறையாக வழங்கப்பட்டது. கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கலந்தாய்வில், பணியிட மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களுக்கு விரும்பிய மாவட்டங்களில் பணியிடங்களை பெற்றுச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா 7 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாற்றமும், 4 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய நிர்வாக மாறுதல் பணியிட நியமனமும் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த சுவாமிநாதன் சிவகங்கை மாவட்டத்திற்கும், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த நசுருதீன் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான ஆறுமுகம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குனராகவும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்தில் மணிவண்ணனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தொடக்கக்கல்வித் துறையில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த வெற்றிச்செல்வி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான திருவளர்செல்வி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்தவர்களில் பதவி உயர்வு பெற்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ராமன், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கார்த்திகா, நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக தாமோதரன் மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் துணை இயக்குனராக விஜய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'மாணவர்களிடம் நற்பண்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி