இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா பாதுகாப்பு மையங்களிலும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்கள் நாள்தோறும் செய்திகளை அறிந்து கொள்ள ஏதுவாக, சென்னை மாநகராட்சி, ’மேக்ஸ்டர் இணைய செய்தி வாசிப்பு’ நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக டிஜிட்டல் பத்திரிகைகளை வழங்கியுள்ளது.
ஐஐடி வளாகம், சென்னை வர்த்தக மையம், நந்தனம் கலைக்கல்லூரி, கே.பி.பார்க், சத்யபாமா பல்கலைக்கழகம், புனித ஜோசப் பொறியியல் கல்லூரி, தங்கவேலு பொறியியல் கல்லூரி, ரிப்பன் கட்டடம் ஆகிய எட்டு இடங்களில் இந்த இலவச டிஜிட்டல் பத்திரிகை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கரோனா பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள அனைவரும் மேக்ஸ்டர் (www.magzter.com) நிறுவன இணையதளத்தில் உள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகளையும் செய்தித்தாள்களையும் இலவச மற்றும் அளவற்ற எண்ணிக்கையில் படித்து பயன் பெறலாம்.
தொழில்நுட்பம், விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பிரிவுகளைச் நூற்றுக்கணக்கான பிரபல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் இந்த மேக்ஸ்டர் இணையதளத்தில் உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.